Saturday, October 8, 2016

வேண்டாமே பிரதேசவாதம்..

வணக்கம் நண்பர்களே!




நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் நான் எழுதும் வலைப்பதிவு இது. ஆனால் நான் கொண்டுவந்திருக்கும் விடயமோ மிகவும் வில்லங்கமானதாகும்.. இந்த வலைப்பதிவினை எத்தனைபேர் படிப்பீர்களோ தெரியாது . அவ்வாறு தப்பித் தவறியேனும் இந்தப் பக்கத்தினைப் படிக்கும் உங்களில் எத்தனைபேர் என்மீது கோபம் கொள்ளப் போகிறீர்களோ அதுவும் எனக்குத் தெரியாது.. ஆகையினால் நீங்கள் இப்பதிவினை படிக்கத் தொடங்கும் முன்னர் ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும்.. இப்பதிவானது, எந்த தனிப்பட்ட நபரினையோ, எந்தவொரு சமூகத்தினையோ, அல்லது எந்தவொரு குறிப்பிட்ட பிரதேசத்தினை பூர்வீகமாகக் கொன்டவர்களையோ புண்படுத்தும் நோக்கத்திற்காக எழுதப்பட்டதல்ல.. நான் பள்ளி வாழ்க்கையினை ஆரம்பித்த காலத்திலிருந்து, நான் சந்தித்த, பார்த்த, கேள்விப்பட்ட கசப்பான அனுபவங்களின் மூலம், நீண்ட நாட்களாக எனக்குள்ளே அடக்கி வைத்திருந்த உணர்வுகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

யாழ்ப்பாணம்... இலங்கைத் தீவின் கேந்திர, சரித்திர சிறப்பு மிக்கதொரு அழகிய நகராகும். யாழ்நகரானது பிரித்தானியர் காலம்தொட்டு சமூக, பொருளாதார மற்றும் பௌதீக வளர்ச்சிகளைப்பெற்று வடக்கின் முத்தாகத் திகந்து வருகிறது என்றாலும் மிகையாகாது.. இதில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் நான் இங்கு கூறவரும் விடயம் அதுவல்ல. இவ்வாறு சிறப்புவாய்ந்த யாழ்நகரினைப் பூர்வீகமாக் கொண்ட சிலரின் சில மேலாதிக்கச்சிந்தனைகள் பற்றியதாகும். எந்தவொரு தனிநபரிற்கும் தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மண்மீது மிகப்பெரிய பற்றும், பாசமும், அன்பும் இருப்பது மனிதஇயல்பு. ஆனால், அவர்சாராத வேறு பிரதேச மக்களினை தங்களுக்கு கீழானவர்களாக நினைத்து அவர்கள் மீது வேறுபாடு கட்டுவது முறையற்றது. யாழ்ப்பாணத்தவர் அநேகர் (அனைவரும் அல்ல) பிற பிரதேச மக்களை தமக்குக் கீழானவர்களாக நினைப்பது எவராலும் மறுக்கப்பட முடியாததொன்றாகும்.

இந்த விடயம் எவராலும் மறுக்க முடியாத தவிர்க்க முடியாத உண்மை. ஆனால் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் மனசாட்சிக்கு தெரியும் இதன் உண்மை தன்மை. யாழ்பானத்தவர் பெரும்பாலும் ஏனைய பிரதேசத்தவர்களை தமக்கு கீழானவர்கள் என்ற கண்ணோட்டத்துடனே நோக்குவார்கள். வெளிநாடுகளில் ஒருவரை சந்திக்கும்போது அவர்களின் முதல் கேள்வி " அண்ணன் தமிழா...?" என்பது . அடுத்த கேள்வி " அண்ணே ஊரில் எவ்விடம்....? வடமரட்சியா..? கரவெட்டியா..? என நீளும். இல்லை நான் வவுனியா அல்லது மட்டக்களப்பு என்றால் பார்வை மாறும். இதை உண்மை இல்லை என்று எவராவது மறுக்கட்டும் பார்க்கலாம். நீங்கள் மேலானவர்கள் என நினைப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் நான் சொல்ல வருவது, அடுத்தவர்களை நீங்கள் எப்படி கீழ்த்தரமனவர்களாக பார்க்க முடியும்? இதற்கு நல்லதொரு உதாரணம், யாழில் வன்னி மக்களை பொதுவாக காட்டார் என்றே குறிப்பிடுவார்கள். இதுவே வழமை.

நண்பர்களே நான் பிரதேசவாதம் பேசவில்லை, மாறாக உண்மையை சொல்கிறேன். தமிழர் என்பது அனைவரையும் உள்ளடக்கியது. யாழ்பானத்தவர்கள் மட்டும் தமிழர்கள் இல்லை. அவர்கள் மட்டும் மேலானவர்கள் இல்லை. இலங்கைத் தமிழ் என்பது யாழ்பாணியத் தமிழ் அல்ல.

யாழ் மக்களை பார்த்து பிறபிரதேச மக்கள் பொறமை படுவார்களாம், ஏன் என்றால் அவர்கள் உயர் பதவிகளில் இருப்பதும் நன்றாக படிப்பதும் காரணமாம். நன்றாக படிப்பதையும் உயர்பதவிகளை வகிப்பதனியும் நான் வரவேற்கிறேன். ஆனால் நீங்கள் படித்த வர்க்கத்தினர் என்பதற்காக பிற பிரதேச மக்களை ஏளனமாகப் பார்ப்பது முறையானதா? இத்தனைக்கும் யாழ் அல்லாத பிற பிரதேச மக்கள், படித்து உயர் பதவிகளில் இருக்கும் யாழ்ப்பாணத்தவர் மீது மிகுந்த மரியாதையை காட்டியே நடப்பார்.

இது இலங்கையில் மட்டுமல்ல, இந்தியா மற்றும் மலேசியாவில் கூட இதுவே நடக்கிறது.. இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசியத் தமிழர்கள் (இங்கு இவர்களை ceylonese என்று அழைப்பர்) இந்தியத் தமிழர்கள் மீது காட்டும் வேறுபாடு மறுக்கப்பட முடியாததொன்றாகும்.. இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை மேலானவர்களாக நினைப்பதோடு, இந்தியத் தமிழர்களை தமக்குக் கீழானவர்கள் என்ற கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறார்கள். இது வேதனைக்குரிய உண்மை.

மனிதர்களே.. மனிதனை மனிதனாகப் பார்க்கவே மாட்டீர்களா? வேறு இனம்,வேறு பிரதேசம், வேறு சாதி என்ற பிளவுகளும், பிரிவினைகளும் எத்தனை நாள் தான் உங்களை உங்களுடன் இருக்க்கப் போகிறது? இவற்றையெல்லாம் நீங்கள் உங்களிற்குள் இருந்து நீங்கள் கலைந்தெடுக்கா விட்டால் மனிதம் என்பது விரைவில் மரித்துப்போகும்.

பிற்குறிப்பு: நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, நான் எல்லோரினையும் இங்கு குறிப்பிடவில்லை.. இவ்வாறு பிரதேசவாதம் காட்டும் ஒருசிலரினைப் பற்றியே இங்கு குறிப்பிடுகிறேன். (எனது யாழ் நண்பர்களே: இந்தப் பதிவு உங்களை என்வகையிலேனும் காயப்படுத்துமாக இருந்தால் அதற்காக வருந்துகிறேன்). இந்த முற்றாக ஒழிக்கப் படவேண்டிய பிரதேசவாதமானது, யாழ்நகரில் மட்டுமல்ல.. ஏனைய பிரதேசங்களிலும் உண்டு என்பதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இப் பிரதேசவாதத்தினால் யாழ்மக்கள் பாதிக்கப்படுவது ஒப்பீட்டளவில் மிகமிகக் குறைவானது.



நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்!

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"


.

Sunday, June 9, 2013

www.vavuniyanet.com

Friends, Please visit my site www.vavuniyanet.com. It's a leading Tamil website from Sri Lanka that delivers lot of useful stufs.

Saturday, March 6, 2010

இன்னுமா திருந்தவில்லை?

"கடவுள்"... இந்த நான்குகெழுத்துச் சொல்லின் பின்னால் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் விவாதங்கள், சந்தேகங்கள், சர்ச்சைகள், விடை தெரியாத கேள்விகள்.. எந்தக் கேள்விகளுக்கும் இன்றுவரை விடை கிடைத்ததாகத் தெரியவில்லை.. கடவுள் இருக்கிறார் அன்று அடித்துக் கூறுபவர்கள் பலபேர்.. அதேபோல கடவுளாவது மண்ணாவது என மறுத்துக் கூறுபவர்களும் பலபேர்.. கடவுள் இருக்கிறாரா இல்லையா என என்னிடம் கேட்டால், எனதுபதில் தெரியாது என்பதே ஆகும்.. ஆயினும் நம்பிக்கையோடு வழிபடுமிடத்து, தெய்வவழிபாடனது மனிதனை நல்வழிப் படுத்தக் கூடியதும் மனதிற்கு நம்பிக்கையினையும், வாழ்கையில் ஒரு தைரியத்தினையும் அளிக்கிறது என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்துகளும் கிடையாது.. அந்த வகையில் நேரம் கிடைக்கும்போது அவ்வப்போது நான் கூட வழிபாட்டுத் தளங்களிற்குச் செல்வதுண்டு..

என்றுமே விடை தெரியாப் புதிராகஇருக்கும் கடவுளைப்பற்றிக்கூட ஆராயாமல் விட்டு விடலாம்.. ஆனால், கடவுளின் தூதுவர்களாகவும், தரகர்களாகவும் தங்களைக் கூறிக்கொண்டு, மக்களினது அறியாமை அல்லது அளவுக்கு அதீதமான தெய்வனம்பிக்கையினை தங்களுக்கான உரமாகக்கொண்டு, அப்பாவி(?) மக்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து பணத்தினைச் சூறையாடும் போலிச்சாமியார்களை என்னவென்று கூறுவது? அவர்களைக் கூட விட்டுவிடலாம்.. ஆனால் தாங்களைத் தாங்களே கடவுள் என்றும், பகவான் என்றும் கூறிக் கொண்டு பித்தலாட்டம் பண்ணி சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களைப்பற்றி கொஞ்சம் அலசிப் பார்க்கலாமென நினைக்கின்றேன்.

யோகி அல்லது குரு என்பவர் யார்? தன்னிடம் வரும் பக்தர்களுக்கு நல்உபதேசங்களைப் பண்ணி, அவர்களை நல்வழிப்படுத்தி மனிதனைப் பூரணப் படுத்துபவர்தான் குருவே தவிர, தன்னையே கடவுள் எனக்கூறி, தன்னை நம்பி வரும்பக்தர்களை மடையர்களாக ஆக்குபவரல்ல குரு. இவ்வாறு கடவுளின் பெயரைச் சொல்லி காமலீலைகளிலும் சுகபோக வாழ்க்கையிலும் ஈடுபடுபவர்கள் பலபேர்.. அவர்களை நம்பி இலட்ச இலட்சமாய் பணத்தினை வீணடித்து வாழ்க்கையினைத் தொலைத்தவர்களும் பலபேர்..



அண்மைக் காலமாக இந்தியத் தொலைகாட்சிகளையும், இணையத்தளங்களிலும் இருபது நிமிட வீடியோ காட்சிகளின் மூலமாகக் கலக்கிக்கொண்டு இருப்பவர்தான் சுவாமி நித்யானந்தா..

யார் இந்த நித்தியானந்தா? இவர் ஒன்றும் கடவுளின் அவதாரமோ அல்லது தேவீகப் பிறவியோ அல்ல.. தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்த இவரின் குடும்பம் ஒரு சாதாரண விவசாய குடும்பம். 1978ம் ஆண்டு பிறந்த நித்யானந்தாவின் ண்மையான பெயர் ராஜசேகரன்.இவரின் அப்பா ஒரு கூலி தொழிலாளி. சிறுவயது முதலே சமய மற்றும் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவராகவே இருந்துள்ளார்.கல்லூரியில் சேர்ந்த முதல் இவரை கல்லூரியில் பார்ப்பதை விட ஆலயங்களில் மட்டுமே அதிகம் பார்க்க முடிந்ததாம் என்றும் கூறப்படுகிறது..

சிறுவயது முதலே பல ஆன்மீகப் புத்தகங்களையும் படித்து ஆன்மீகத்தில் தேர்ச்சி பெற்ற இவர், பின்னர், உலகம் முழுவதும் 33 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளை துவக்கி ஆன்மிக பணிகள் ஆற்றி வருவதாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். பல தரப்பினர் மத்தியிலும் பிரபலமான இவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் வசீகரமாக பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவர். 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது..

இந்நிலையில், நித்தியானந்தா, ஒரு நடிகையுடன் இருப்பது போன்ற வீடியோவை சண் செய்திகள் தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நடிகையும், நித்தியானந்தாவும் சின்னச் சின்ன சில்மிஷங்களில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. புனிதமான காவி உடை தரித்து நாட்டு மக்களுக்கு அருளாசி வழங்கியும் பத்திரிகைகளில் தொடர் எழுதியும் நல்வழி போதிக்கும் சாமியாரின் சல்லாப லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை காலமும் நித்யனந்தாவை கடவுளுக்கு நிகராகப் போற்றிப் பூஜித்த அவரது பக்தர்களே இன்று அவருக்கெதிராகக் குரலெழுப்பி இந்தியா முழுவதிலுமுள்ள அவரது ஆச்சிரமங்களினையும் அடித்து உடைத்து வருகிறார்கள்..

உண்மையில் இந்த நித்தியானந்தா அப்படி என்ன தவறு செய்து விட்டார்? அறியா மக்களை ஏமாற்றி, தன்னைக் கடவுள் என நம்பவைத்து அவர்களிடம் பணம் பறித்து அதன்மூலம் உல்லாச வாழ்க்கை அனுபவித்தமை நிச்சயம் தவறேதான். மிகப்பெரிய தவறுதான். அனால் அதைவிடுத்து, அண்மையில் வெளியாகிய வீடியோக் காட்சிகளை மாத்திரம் வைத்துக்கொண்டு அதனடிப்படையில் அவர் செய்தமை தவறு என்று கூறுவதில் எவ்வாறு நியாயம் இருக்க முடியும்? முப்பத்திரண்டு வயதுகளான ஒருவர் ஒரு பெண்ணுடன் அப்பெண்ணின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்வதில் என்ன தவறு? அவரும் ஒரு சராசரி மனிதன்தானே? சாதாரண ஒரு மனிதனுக்குரிய உணர்ச்சிகள், ஆசாபாசங்கள், விருப்புகள் அவருக்கும் இருக்கத்தானே செய்யும்?

ஒரு சாதாரண மனிதன் தன்னையே கடவுளெனக் கூறினால் மனிதர்களாகப் பிறந்த நாம் பகுத்தறிவுகொண்ட நாம் அதனை நம்பி விடுவதா? ஆக, இந்த நித்தியானந்தா குறிப்பிட்ட பெண்ணுடன் சில்மிஷம் செய்தமை தவறில்லை.. மாறாக அவரை கடவுளென நம்பி, உழைத்து உழைத்துச் சேர்த்த பணத்தினைஎல்லாம் முட்டாள்த்தனமாக இந்தப் போலிச் சாமியாருக்காக வீணடித்த அவரது பதர்களாக இருந்து அவரினை இந்த அளவிற்கு வளர்த்துவிட்ட நமது சமூகம் செய்த குற்றமே மிகப்பெரிய குற்றம்.. நித்யனந்தாவினைப் பிடித்து அவருக்கு தண்டனை வழங்குவதற்கு முன்பதாகவே அவரை வளர்த்துவிட்ட, மனிதனைக் கடவுளாக வணங்கும் அறியாத கூட்டத்தினையே முதலில் தண்டிக்க வேண்டும்..



அடுத்து கல்கி பகவான், அம்மா பகவான் என்கிற ஒரு தம்பதியினர்.
இந்த அம்மா பகவான் கலாச்சாரம் எங்கு பார்த்தாலும் சூடு கிளப்பபுகிறது.என் இனிய அறிவுமிக்கத் தோழர்களே! மனிதாகப்பிறந்த நாம் ஏன் இன்னொரு மனிதனை வணங்க வேண்டும். நீங்கள் இன்னொரு மனிதனை மரியாதை செய்யுங்கள் ஆனால் வணங்காதீர்கள்.

இந்த அம்மா பகவான் தன்னை கல்கி அவதாரம் என்கிறார். எங்கேயாவது கடவுள் தன்னைத்தானே சுயபிரகடனம் செய்வார்களா? அவர் தானே கடவள் என்று சுயப்பிரகடனம் செய்து கொண்டு மிக அதிகமான சொத்துகளைச் சேர்த்துக்கொள்கிறார். மக்களின் பணத்தை பறித்துக்கொள்கிறார். அம்மா பகவானைப் பார்ப்பதற்கு 10000 ரூபா பேசுவதற்கு 20000ரூபாவாம். அதுவும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு இந்தக் கட்டணம் பல இலட்சங்கள் வரை நீளுமாம். அம்மா பகவானை காசுகட்டிப் பார்த்தவர்களினதும் பார்க்கப்போகிறவர்களினதும் வாதம் என்னவென்றால் அம்மா பகவானுக்கு காசுகொடுத்துப் பார்த்தால் அந்த காசு பலமடங்கு திரும்பக்கிடைத்துவிடும் என்பதுதான். காசு காசு என்று அலையும் சுயநலாவதிகளே இயலுமானவரை அறிவுள்ள சுயநலவாதிகளாக இருங்கள்.

பகவான் அன்பானவர்தானே. அப்படியானால் பகவானுக்குத்தேவை அன்புதானே ஒழிய காசில்லையல்லவா?. பகவானுக்கு அன்பிருந்தால் காசைக் கொடுக்கவேண்டியது தானே அதேன் முதலில் காசை வேண்டி பின்பு பல மடங்காகத்தருவது. கடவுள் என்ன சீட்டுக் கம்பனியா நடத்துகிறார்? அங்கேயாவது நமக்கு குறிப்பிட்டகாலத்தில் எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியும். ஆனால் இங்கே நாம் காசு கொடுப்பது தெரியும் ஆனால் அது எப்போது பலமடங்காகக் கிடைக்கும் என்பது தெரியாது. இந்த 10000ரூபாவை அல்லது 20000ரூபா வங்கியில் வைப்புசெய்தால் சிறிதளவு வட்டியாவது குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்கும். வங்கி அம்மாபகவான் போல ஏமாற்றவும் மாட்டாது. அங்கே ரசீது கொடுப்பார்கள் கண்காய்வு செய்வார்கள் சட்டப்பாதுகாப்பாவது இருக்கும்.

சரி உங்கள் வாதப்படியே வைத்துக் கொள்வோம். அவர் கடவுள்தான்அப்படியானால் சுனாமிப்பேரலை வருவதற்கு முன் சுனாமி வருகிறது என்று சொல்லி பல இலட்சம் உயிர்களைக் காத்திருக்கலாம் தானே. சுனாமி வருவது அமெரிக்க விஞ்ஞானிகளுக்குத் தெரிந்தளவு ஏன் அம்மா பகவானுக்குத் தெரியவில்லை. பக்தர்களிடமிருந்து கோடிகோடியாகப் பணத்தை எடுக்கும் அம்மா பகவான் ஏன் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதில்லை?

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், உங்களால் முடிந்தளவு கஷ்டப்பட்டு உழையுங்கள்.. உங்கள் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள்.. அவர்களின் எதிர்காலத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.. உன்ன உணவில்லாமல் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஒருநேர உணவேனும் அளியுங்கள்.. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வையுங்கள்.. எல்லா உயிர்களையும் உங்களைப் போல் நினைத்து நேசியுங்கள்.. உங்களால் முடிந்தளவு அடுத்தவர்களுக்கு உதவுங்கள். இந்த அம்மாக்களுக்கும் பகவான்களுக்குமென நீங்கள் உழைத்த பணத்தினஎல்லாம் வீணடித்து அவர்களின் காலில் கிடையாக் கிடப்பதை விடுத்து உங்களைப்பெற்ற அம்மா அப்பாவினை வணங்குங்கள்.. இத்தனையையும் நீங்கள் செய்தால் கடவுளைத்தேடி நீங்கள் செல்லத்தேவை இல்லை.. கடவுள் உங்களைத் தேடிவருவார்.

அன்புடன் -திவா-

Wednesday, September 9, 2009

உனக்குக் கீழே உள்ளவர்களைப் பார்த்து திருப்திகொள்...

மனிதனுக்கு மட்டுமே உள்ளதொரு கெட்டகுணம் என்னவெனில் எவ்வளவுதான் வசதியாக இருந்தாலும், நன்றாக வாழ்ந்தாலும் நமக்கு என்றுமே திருப்தி ஏற்படுவது கிடையாது.. குறிப்பாக நம்மவர்கள் பலரிடத்தில் இருக்கும் வேரோடு அறுத்தெறிய வேண்டியதொரு தீய பழக்கம் யாதெனில் நமக்கு மேலே உள்ளவர்களையும் நம்மைவிட வசதியானவர்களையும் பார்த்து, அவர்களைப்போல் நாமும் இலையே என் வருத்தப்படுவது...

அவர்களுக்கெல்லாம் என்னால் சொல்லக்கூடியது ஒன்று மட்டுமே.. உன்னைவிட உயர்வானவனைப் பார்த்து, அவனைப்போல் நீயும் இலலையே என வருத்தப்படாதே. மாறாக உனக்குக் கீழே உள்ளவர்களைப்ப் பார்.. இந்த உலகில் ஒரு சாதாரண வாழ்வுக்கு அன்றாடம் போராடித் தவித்து வருபவர்களைப் பார்.. ஒருவேளை உணவு கூட கிடைக்காது, இருக்க ஒரு இடம் கிடைக்காது தினம் தினம் அல்லற்படுவோர் இந்த உலகில் எத்தனை எத்தனை பேர்.. அவர்களை ஒருபொழுது எண்ணிப்பார்... உன்வாழ்வில் நீ திருப்தி கொள்வாய்..

எனது நண்பர் ஒருவரிடம் இருந்து "Best email of the year" என்னும் தலைப்பிட்டு எனக்கு கிடைத்தவொரு மினஞ்சலில் இருந்து எடுக்கப்பட்டவையே கீழே உள்ள படங்கள்..


உனது வாழ்க்கை உனக்கு சந்தோசமாக இல்லையா?
இதுதான் இவர்களில் அன்றாட வாழ்வு.. இவர்களைப் பார்த்தாவது இவர்களைவிட நமது வாழ்க்கை சந்தோசமானது எனத் திருப்தி கொள்ளுங்கள்.

உனது வருமானம் உனக்குப் போதாதா?
இந்தச் சிறுவனைப் பாருங்கள்.. இவனை விடவும் நமது வருமானம் அல்லது சம்பளம் அதிகமானது எனத் திருப்தி கொள்ளுங்கள்.


நல்ல நண்பர்கள் இல்லையா உனக்கு?
இவரின் நண்பனைப் பாருங்கள்.. இவர் கொள்ளும் திருப்தி உங்களிடத்தில் மட்டும் ஏன் இல்லை?


உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதையுமே சுமையாக நினைக்கிறீர்களா?
அது இவர் சுமக்கும் சுமையை விடவுமா அதிகமானது?


நீங்கள் உல்லாசமாக உலாவருவதற்கு கார் ஒன்று இல்லையெனக் கவலைப் படுகிறீர்களா?
இவர்களைப் பாருங்கள். கார் இல்லாதது நமக்கு ஒரு குறையா?


இவற்றையும் பாருங்கள்..








இப்ப என்ன சொல்லறீங்க? இவர்களையெல்லாம் விட விட நாம் வாழும் வாழ்க்கை சந்தோசமானதும் திருப்தியானதுமே...

Thursday, August 27, 2009

நானும் வரலாமா?




இன்றைய நாள் என் வாழ்கையில் ஒரு மறக்க முடியாத நாள் ஆகப்போகிறது என்றால் மிகையாகாது. காரணம் இன்று முதல் நானும் ஒரு வலைப்பதிவாளன்(ஹி.. ஹி..). இன்றுவரை பலபிரபல பதிவாளர்களினது வலைப்பதிவகளை வெறுமனே வாசித்து மட்டுமே வந்த நான் (பின்னூட்டமிடுவது கூட கிடையாது) இன்று முதல் ஒரு வலைப்பதிவினை சொந்தமாக எழுத ஆரம்பிப்பது என்ற துணிச்சலான முடிவுடன்.......


ஏதோ எழுதிவிடலாம் என்று ஒரு நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன், ஆனால் எதை எழுதலாம், எதை எழுதப்போகிறேன் என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால் வலைப்பதிவு எழுதும் தகுதி என்னிடத்தில் இருக்கிறதா என்னும் கேள்வி எனக்குள்ளேயெ எழுகிறது. ஆயினும் என்னால் இயன்றளவு என் உணர்வுகளை உங்களிடத்தில் உளரலாம் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கிறேன். ஆதரிப்பீர்களா?

வலைப்பதிவு எழுத ஆரம்பிக்க வேண்டும் என்னும் ஆசை எனக்குள்ளும் எப்படி ,வந்தது என்னையும் எழுதத் தூண்டியவை எவை என்பன பற்றி மற்றுமொரு பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


அன்புடன் -திவா-