Saturday, October 8, 2016

வேண்டாமே பிரதேசவாதம்..

வணக்கம் நண்பர்களே!




நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் நான் எழுதும் வலைப்பதிவு இது. ஆனால் நான் கொண்டுவந்திருக்கும் விடயமோ மிகவும் வில்லங்கமானதாகும்.. இந்த வலைப்பதிவினை எத்தனைபேர் படிப்பீர்களோ தெரியாது . அவ்வாறு தப்பித் தவறியேனும் இந்தப் பக்கத்தினைப் படிக்கும் உங்களில் எத்தனைபேர் என்மீது கோபம் கொள்ளப் போகிறீர்களோ அதுவும் எனக்குத் தெரியாது.. ஆகையினால் நீங்கள் இப்பதிவினை படிக்கத் தொடங்கும் முன்னர் ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும்.. இப்பதிவானது, எந்த தனிப்பட்ட நபரினையோ, எந்தவொரு சமூகத்தினையோ, அல்லது எந்தவொரு குறிப்பிட்ட பிரதேசத்தினை பூர்வீகமாகக் கொன்டவர்களையோ புண்படுத்தும் நோக்கத்திற்காக எழுதப்பட்டதல்ல.. நான் பள்ளி வாழ்க்கையினை ஆரம்பித்த காலத்திலிருந்து, நான் சந்தித்த, பார்த்த, கேள்விப்பட்ட கசப்பான அனுபவங்களின் மூலம், நீண்ட நாட்களாக எனக்குள்ளே அடக்கி வைத்திருந்த உணர்வுகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

யாழ்ப்பாணம்... இலங்கைத் தீவின் கேந்திர, சரித்திர சிறப்பு மிக்கதொரு அழகிய நகராகும். யாழ்நகரானது பிரித்தானியர் காலம்தொட்டு சமூக, பொருளாதார மற்றும் பௌதீக வளர்ச்சிகளைப்பெற்று வடக்கின் முத்தாகத் திகந்து வருகிறது என்றாலும் மிகையாகாது.. இதில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் நான் இங்கு கூறவரும் விடயம் அதுவல்ல. இவ்வாறு சிறப்புவாய்ந்த யாழ்நகரினைப் பூர்வீகமாக் கொண்ட சிலரின் சில மேலாதிக்கச்சிந்தனைகள் பற்றியதாகும். எந்தவொரு தனிநபரிற்கும் தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மண்மீது மிகப்பெரிய பற்றும், பாசமும், அன்பும் இருப்பது மனிதஇயல்பு. ஆனால், அவர்சாராத வேறு பிரதேச மக்களினை தங்களுக்கு கீழானவர்களாக நினைத்து அவர்கள் மீது வேறுபாடு கட்டுவது முறையற்றது. யாழ்ப்பாணத்தவர் அநேகர் (அனைவரும் அல்ல) பிற பிரதேச மக்களை தமக்குக் கீழானவர்களாக நினைப்பது எவராலும் மறுக்கப்பட முடியாததொன்றாகும்.

இந்த விடயம் எவராலும் மறுக்க முடியாத தவிர்க்க முடியாத உண்மை. ஆனால் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் மனசாட்சிக்கு தெரியும் இதன் உண்மை தன்மை. யாழ்பானத்தவர் பெரும்பாலும் ஏனைய பிரதேசத்தவர்களை தமக்கு கீழானவர்கள் என்ற கண்ணோட்டத்துடனே நோக்குவார்கள். வெளிநாடுகளில் ஒருவரை சந்திக்கும்போது அவர்களின் முதல் கேள்வி " அண்ணன் தமிழா...?" என்பது . அடுத்த கேள்வி " அண்ணே ஊரில் எவ்விடம்....? வடமரட்சியா..? கரவெட்டியா..? என நீளும். இல்லை நான் வவுனியா அல்லது மட்டக்களப்பு என்றால் பார்வை மாறும். இதை உண்மை இல்லை என்று எவராவது மறுக்கட்டும் பார்க்கலாம். நீங்கள் மேலானவர்கள் என நினைப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் நான் சொல்ல வருவது, அடுத்தவர்களை நீங்கள் எப்படி கீழ்த்தரமனவர்களாக பார்க்க முடியும்? இதற்கு நல்லதொரு உதாரணம், யாழில் வன்னி மக்களை பொதுவாக காட்டார் என்றே குறிப்பிடுவார்கள். இதுவே வழமை.

நண்பர்களே நான் பிரதேசவாதம் பேசவில்லை, மாறாக உண்மையை சொல்கிறேன். தமிழர் என்பது அனைவரையும் உள்ளடக்கியது. யாழ்பானத்தவர்கள் மட்டும் தமிழர்கள் இல்லை. அவர்கள் மட்டும் மேலானவர்கள் இல்லை. இலங்கைத் தமிழ் என்பது யாழ்பாணியத் தமிழ் அல்ல.

யாழ் மக்களை பார்த்து பிறபிரதேச மக்கள் பொறமை படுவார்களாம், ஏன் என்றால் அவர்கள் உயர் பதவிகளில் இருப்பதும் நன்றாக படிப்பதும் காரணமாம். நன்றாக படிப்பதையும் உயர்பதவிகளை வகிப்பதனியும் நான் வரவேற்கிறேன். ஆனால் நீங்கள் படித்த வர்க்கத்தினர் என்பதற்காக பிற பிரதேச மக்களை ஏளனமாகப் பார்ப்பது முறையானதா? இத்தனைக்கும் யாழ் அல்லாத பிற பிரதேச மக்கள், படித்து உயர் பதவிகளில் இருக்கும் யாழ்ப்பாணத்தவர் மீது மிகுந்த மரியாதையை காட்டியே நடப்பார்.

இது இலங்கையில் மட்டுமல்ல, இந்தியா மற்றும் மலேசியாவில் கூட இதுவே நடக்கிறது.. இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசியத் தமிழர்கள் (இங்கு இவர்களை ceylonese என்று அழைப்பர்) இந்தியத் தமிழர்கள் மீது காட்டும் வேறுபாடு மறுக்கப்பட முடியாததொன்றாகும்.. இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை மேலானவர்களாக நினைப்பதோடு, இந்தியத் தமிழர்களை தமக்குக் கீழானவர்கள் என்ற கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறார்கள். இது வேதனைக்குரிய உண்மை.

மனிதர்களே.. மனிதனை மனிதனாகப் பார்க்கவே மாட்டீர்களா? வேறு இனம்,வேறு பிரதேசம், வேறு சாதி என்ற பிளவுகளும், பிரிவினைகளும் எத்தனை நாள் தான் உங்களை உங்களுடன் இருக்க்கப் போகிறது? இவற்றையெல்லாம் நீங்கள் உங்களிற்குள் இருந்து நீங்கள் கலைந்தெடுக்கா விட்டால் மனிதம் என்பது விரைவில் மரித்துப்போகும்.

பிற்குறிப்பு: நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, நான் எல்லோரினையும் இங்கு குறிப்பிடவில்லை.. இவ்வாறு பிரதேசவாதம் காட்டும் ஒருசிலரினைப் பற்றியே இங்கு குறிப்பிடுகிறேன். (எனது யாழ் நண்பர்களே: இந்தப் பதிவு உங்களை என்வகையிலேனும் காயப்படுத்துமாக இருந்தால் அதற்காக வருந்துகிறேன்). இந்த முற்றாக ஒழிக்கப் படவேண்டிய பிரதேசவாதமானது, யாழ்நகரில் மட்டுமல்ல.. ஏனைய பிரதேசங்களிலும் உண்டு என்பதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இப் பிரதேசவாதத்தினால் யாழ்மக்கள் பாதிக்கப்படுவது ஒப்பீட்டளவில் மிகமிகக் குறைவானது.



நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்!

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"


.